டோக்கியோ: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பீயூஷ் கோயல், 200-க்கும் மேற்பட்ட தொழில் பிரதிநிதிகள் அடங்கிய வர்த்தகக் குழுவுடன் நான்கு நாள் பயணமாக இன்று ஜப்பான் புறப்பட்டார்.
இந்தியா – ஜப்பான் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் அதிகரிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசின் முக்கிய அமைச்சர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் பீயூஷ் கோயல் ஆலோசனை நடத்த உள்ளார்.
டோக்கியோவில் ஜப்பான் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அகசாவா ரியோசேயுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் அவர், முன்னணி ஜப்பான் நிறுவனங்களின் உயரதிகாரிகளையும் சந்திக்கிறார். மேலும், 1,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கெய்டன்ரென் அமைப்பின் பிரதிநிதிகளுடன் வட்டமேசை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
நகோயா மற்றும் ஒசாகாவிலும் நடைபெறும் தொழில் மற்றும் முதலீட்டாளர் சந்திப்புகளில் பங்கேற்கும் பீயூஷ் கோயல், எலக்ட்ரானிக்ஸ், தொழில்துறை மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
