சென்னை: மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் திரைத்துறை பங்களிப்பையும் கலைச் சேவையையும் போற்றும் வகையில், அவரது சொந்த மாவட்டமான தேனியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அரசு சார்பில் பிரம்மாண்ட மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
ஸ்டூடியோவுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை கிராமங்களின் வாழ்வியலையும், மனிதர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. 1977-ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘கிழக்கு சீமையிலே’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கினார்.
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி முத்திரை பதித்த பாரதிராஜா, தேசிய விருது மற்றும் மாநில அளவிலான பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை, உறவுகள், காதல், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை இயல்பான காட்சியமைப்புடன் பதிவு செய்ததில் அவரது பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், பாரதிராஜாவின் கலைச் சாதனைகளை என்றென்றும் நினைவுகூரும் வகையில் தேனி மாவட்டத்தில் அதிநவீன அம்சங்களுடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றார்.
இதற்கான அரசாணை வெளியிடுவதுடன், முதற்கட்ட பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மணிமண்டபத்தில் பாரதிராஜாவின் உருவச்சிலை, அவரது திரைப்பயண சாதனைகளை விளக்கும் புகைப்படக் கூடம் மற்றும் அவர் பயன்படுத்திய கலைப்பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் தென் தமிழக மக்களிடையே மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
