நியூயார்க்: இந்த ஆண்டின் முக்கிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான பகுதி சந்திர கிரகணம் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிகழ உள்ளது. பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமையாமல், சந்திரன் பூமியின் நிழல் வழியாக கடந்து செல்லும்போது பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சர்வதேச நேரப்படி அதிகாலை 2.33 மணிக்கு சந்திரன் பூமியின் முதன்மை நிழல் பகுதிக்குள் நுழையத் தொடங்கும். அதிகாலை 4.12 மணியளவில் கிரகணத்தின் உச்சநிலை ஏற்படும். அப்போது நிலவின் சுமார் 96 சதவீத பகுதி பூமியின் நிழலில் மறையும்.
கிரகணத்தின் போது நிலவின் பெரும்பகுதி சிவந்த தாமிர நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால், வானியல் ஆர்வலர்களுக்கு இது சிறப்பு வாய்ந்த நிகழ்வாக அமைய உள்ளது.
ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் இந்த நிகழ்வைக் காண முடியும்.
இந்தியாவில் கிரகணம் நடைபெறும் நேரத்தில் பகல் பொழுதாக இருப்பதால், இங்கிருந்து நேரடியாகப் பார்க்க முடியாது.
