சென்னை: கொளத்தூர் தொகுதியில் 100 சதவீத விவிபேட் இயந்திரங்களை எண்ண வேண்டும் என்றும், தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கொளத்தூர் சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். இதையடுத்து, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஸ்டாலின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்றும், முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால் வி.எஸ்.பாபுவின் வெற்றியை ரத்து செய்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க விண்ணப்பித்ததாக வாதிட்டார்.
ஆனால், தேர்தல் ஆணையம் தரப்பில், எம்எல்ஏவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்டாலின் தாக்கல் செய்த மனு நிலைக்கத்தக்கதல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
