சென்னை: சென்னை-மதுரை-சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை அக்டோபர் 25-ம் தேதி முதல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களால் சுமார் 68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த இந்த விமான சேவை, குறைந்த கட்டணம் காரணமாக பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த சேவை நிறுத்தப்பட்டால், சென்னை-மதுரை வழித்தடத்தில் நாள்தோறும் 5-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வரும் இண்டிகோ நிறுவனம் மட்டுமே முக்கிய சேவை நிறுவனமாக மாறும் நிலை ஏற்படும்.
போதிய பயணிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் சேவை நிறுத்தப்படுவதாக கூறப்பட்டாலும், இதனை பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா அமைப்பாளர்கள் மறுத்துள்ளனர்.
சமீபத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு 159 பேரும், மதுரையில் இருந்து சென்னைக்கு 70 பேரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை-மதுரை சேவை லாபகரமாக இல்லை என்றால், மதுரை-பெங்களூரு இடையேயான சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்குகிறது என்றும் பயண முகவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் காலமாகும். தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற தொடர் பண்டிகைகள் வர உள்ள நிலையில், விமான சேவை நிறுத்தப்பட்டால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகலாம் என கூறப்படுகிறது.
விமானங்களின் எண்ணிக்கை குறைந்தால் கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவதைத் தவிர்க்கும் நிலை உருவாகலாம் என்றும் பயண முகவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்து சேவையைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
