கீவ்:உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அந்நாட்டின் எஸ்.பி.யூ. பாதுகாப்பு சேவை தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கீவ் நகர மையத்தில் உள்ள வோலோடிமிர்ஸ்கா தெருவில், புனித சோபியா பேராலயத்திற்கு எதிரே அமைந்துள்ள எஸ்.பி.யூ.வின் மைய கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
தாக்குதலுக்குப் பிறகு கட்டிடத்தின் சில ஜன்னல்களில் இருந்து கரும்புகை வெளியேறியதாகவும், அப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் குறைந்தது 5 பேர் காயமடைந்ததாக கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.யூ. தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாட் உடன் தாக்குதலுக்குப் பிறகு பேசியதாக ஜெலன்ஸ்கி கூறினார். மேலும், சம்பவத்துக்கு தகுந்த உறுதியான பதிலடி கொடுக்குமாறு பாதுகாப்புத் துறை தலைவருக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய வாரங்களில் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் பகல்நேர தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கீவ் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
