பாட்னா: பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 11 மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேபாள எல்லையை ஒட்டியுள்ள பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
இதன் காரணமாக கங்கை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை ஆற்றின் கிளை ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தின் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
