சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் சென்னை பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25.16 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, முதல்வர் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்தை மாற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் சட்டசபையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
தற்போது தலைமைச் செயலகமாக செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை தொடர்ந்து பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து புதிய தலைமைச் செயலகம் எங்கு அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், பட்டினப்பாக்கம் எனப்படும் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான சுமார் 25.16 ஏக்கர் நிலத்துடன், வருவாய்த்துறைக்கு சொந்தமான கூடுதல் நிலங்களையும் சேர்த்து மொத்தம் 26.5 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 லட்சம் சதுர அடி பரப்பளவு
புதிய கட்டிடம் மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 15 அடுக்குகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு ரூ.22 ஆயிரம் என்ற அடிப்படையில் கட்டிடத்தின் மதிப்பு சுமார் ரூ.2,047 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இருந்து சாந்தோம் முக்கிய சாலையை எளிதாக அணுக முடியும் என்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
புதிய தலைமைச் செயலகத்துக்காக போர்ஷோர் எஸ்டேட், கிண்டியில் உள்ள தேசிய ஆராய்ச்சி நிலையம் மற்றும் நந்தம்பாக்கத்தில் பின்டெக் சிட்டி அருகே உள்ள இடம் என 3 இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பட்டினப்பாக்கம் பகுதி சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
1,380 அரசு ஊழியர் குடியிருப்புகள்
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடம் கடந்த 1958-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 1963 முதல் 1998-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இங்கு சுமார் 1,380 அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த குடியிருப்புகள் தற்போது சிதிலமடைந்துள்ளதால் அவற்றை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பட்டினப்பாக்கம் பெயர் வந்தது எப்படி?
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த பகுதி ‘போர்ஷோர் எஸ்டேட்’ என்று அழைக்கப்பட்டது. கடற்கரையை ஒட்டி அமைந்த குடியிருப்பு பகுதி என்பதன் அடிப்படையில் இந்த பெயர் வழங்கப்பட்டது.
அண்ணாதுரை முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இதையொட்டி ஆங்கிலத்தில் இருந்த பல ஊர் பெயர்கள் தமிழில் மாற்றப்பட்டன. அப்போது போர்ஷோர் எஸ்டேட் என்ற பெயர் ‘பட்டினப்பாக்கம்’ என மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
