இயக்குநர் மாரி செல்வராஜ், ‘பைசன் காளமாடன்’ படத்தை தொடர்ந்து ‘மஞ்சணத்தி’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜின் ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ மற்றும் ஃபார்சியூன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இளையராஜா இசையமைக்கிறார்.
மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி முதல்முறையாக உருவாகியுள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘மஞ்சணத்தி’ படத்தின் அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் சிறப்பு வீடியோவுடன் வெளியிடப்பட்டது. அதில் இளையராஜா, படத்தின் தலைப்பை தனது கைப்பட எழுதி, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இப்படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் இணைந்திருப்பது தெரியவந்தது. இருப்பினும், படப்பிடிப்பு உடனடியாக தொடங்காமல், தொடர்ந்து முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் இளையராஜாவும் கலந்து கொண்டார். அவரிடம் ஸ்கிரிப்ட் புத்தகத்தை காண்பித்த மாரி செல்வராஜ், அவரிடம் ஆசி பெற்றார்.
இதைத்தொடர்ந்து இளையராஜா கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த பூஜை விழாவின் மூலம் படத்தில் மேலும் சில முக்கிய நடிகர்கள் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அறிமுகமான கதிர், ‘29’ படத்தின் நாயகன் விது, நடன அமைப்பாளர் சாண்டி மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் அடுத்தடுத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜா படப்பிடிப்பை தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கி வைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
