பெங்களூரு: இந்தியை தேசிய மொழி என்று குறிப்பிட்டது தவறு என ஒப்புக்கொண்ட கன்னட நடிகர் சிவராஜ்குமார், தனது பேச்சால் ஏற்பட்ட சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ திரைப்படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படம் குறித்து நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக, படத்தில் இந்தி வசனங்கள் பேசுவது தொடர்பாக சிவராஜ்குமாரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், இந்தி தனது இரண்டாவது மொழி என்றும், தன்னால் இந்தி பேச முடியும் என்றும் தெரிவித்தார். அப்போது இந்தியை தேசிய மொழி என்று அவர் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
சிவராஜ்குமாரின் பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், மொழி தொடர்பான விவாதங்களும் எழுந்தன. இதையடுத்து தனது கருத்துக்கு அவர் விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
“நான் இந்தியை தேசிய மொழி என்று குறிப்பிட்டேன். அது இந்திய மொழிகளில் ஒன்று. எங்கள் மொழியான கன்னடம் எங்களுக்கு எப்போதுமே முக்கியமானது. நான் கூறியதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு மக்களுக்கும் அவரவர் மொழி முக்கியமானது என்றும், இந்தி பேசுபவர்களுக்கு இந்தி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கன்னட மக்களுக்கு கன்னடம் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல் இந்திப் படம்
ஆர். சந்துரு இயக்கத்தில் உருவாகும் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ திரைப்படத்தை ஆர்.சி. ஸ்டுடியோஸ் சார்பில் யமுனா சந்துரு தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் சிவராஜ்குமார் மற்றும் நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம், சிவராஜ்குமாரின் முதல் இந்தித் திரைப்படமாகும்.
ஒரு வார்த்தையின் தவறான பயன்பாடுகூட மொழி உணர்வுகளுடன் தொடர்புடைய விவாதத்தை உருவாக்கும் நிலையில், தனது தவறை உடனடியாக ஒப்புக்கொண்டு சிவராஜ்குமார் மன்னிப்பு கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
