கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, மிக் ரக போர் விமான கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கில் நிதி குற்றவிசாரணைப் பிரிவில் நேற்று ஆஜராகி 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
அப்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரியாக கோத்தபய ராஜபக்சே இருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
7 மில்லியன் டாலர் முறைகேடு புகார்
இந்த ஒப்பந்தத்தில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.66.91 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே கோத்தபய ராஜபக்சேவின் உறவினரும், உக்ரைனுக்கான இலங்கை முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது கோத்தபய ராஜபக்சே விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருப்பது இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
