மணிலா: பிலிப்பைன்சில் பயணிகள் மற்றும் சரக்குகளுடன் சென்ற படகில் நடுக்கடலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவுகளுக்கு இடையேயான போக்குவரத்தில் படகுகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
இந்த நிலையில், தலைநகர் மணிலாவில் இருந்து பலாவான் மாகாணத்தின் கோரன் நகரை நோக்கி சென்ற படகில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.
132 பேர் பயணம்
படகில் மொத்தம் 132 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பயணிகளுடன் பைக்குகள், கார்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளும் கொண்டு செல்லப்பட்டன. கோரன் நகருக்கு அருகே நடுக்கடலில் சென்றபோது திடீரென படகில் தீப்பிடித்தது. தீ வேகமாக பரவியதால் படகு முற்றிலும் எரிந்து நாசமானது.
முதற்கட்டமாக 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பின்னர் நடைபெற்ற மீட்புப் பணியில் மேலும் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.
இதுவரை 43 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 54 பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
