சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா அமைக்க சிப்காட் திட்டமிட்டுள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரிய தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் சாலை, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தொழில் பூங்காக்களை சிப்காட் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
கிருஷ்ணகிரி வளர்ந்து வரும் தொழில் மையம்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு அடுத்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்தின் முக்கிய தொழில் மையங்களில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருகிறது. ஓசூர், சூளகிரி, பர்கூர், குருபரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே தொழில் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சூளகிரி அருகே டோரிப்பள்ளி பகுதியில் 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா அமைக்க சிப்காட் முடிவு செய்துள்ளது.
மின்சார வாகன நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்
புதிய தொழில் பூங்காவில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில் பூங்கா செயல்பாட்டுக்கு வந்தால் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
