சென்னை: நடிகர் சூர்யா–ஜோதிகா தம்பதி தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். திருமண உறுதிமொழியை மீண்டும் ஏற்றுக்கொண்ட வீடியோவை ஜோதிகா சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், அது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதியான சூர்யா மற்றும் ஜோதிகா, கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திரையில் இணைந்து நடித்தபோது ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது.
1999-ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். பின்னர் ‘காக்க காக்க’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் அவர்களுக்கிடையேயான நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
திருமணத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். தற்போது தமிழ் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தங்களது 20 ஆண்டுகால காதல் மற்றும் திருமண வாழ்க்கையை கொண்டாடும் வகையில் ஜோதிகா வெளியிட்ட வீடியோவில், வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சி மட்டுமின்றி கருத்து வேறுபாடுகள், விட்டுக்கொடுத்தல், புரிதல், தியாகம் உள்ளிட்ட அனுபவங்களையும் நினைவுகூர்ந்துள்ளார்.
“இது குறைகளற்ற திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் அல்ல; எங்களது குறைகள், புரிதல்கள், விட்டுக்கொடுத்தல் மற்றும் ஒருவருக்கொருவர் மாறிய பயணத்தின் கொண்டாட்டம்” என்ற கருத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
திருமண வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் விதமாக இருவரும் உறுதிமொழிகளை பகிர்ந்து கொண்ட காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
