சென்னை: இயக்குநர் வெற்றிச்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இயக்குநர்கள் எச்.வினோத், சீனு ராமசாமி மற்றும் மறைந்த இயக்குநர் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செழியன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் கனவுகளை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
மகனின் கனவுக்காக போராடும் தாய்
படத்தின் கதையில், தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்துக்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்கு துணை நிற்கிறார்.
வறுமை, சமூகத் தடைகள், பொருளாதார நெருக்கடிகள் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மகனின் கனவை நிறைவேற்ற அந்தத் தாய் மேற்கொள்ளும் போராட்டமே கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் முதல் தோற்றப் போஸ்டரில் தாயும் மகனும் செஸ் காய்களுக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தனர். சிறுவன் செஸ் காயை கையில் ஏந்தியபடி நம்பிக்கையுடன் பார்க்கும் காட்சியும், மறுபுறம் தாய் கவலையுடன் காணப்படும் காட்சியும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
