சென்னை: ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள், ஷெல்லி கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவையும், பரத் சங்கர் இசையையும் கவனித்துள்ளனர். ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
ஒரே இரவில் நடக்கும் கதை
திருமணத்தில் இருவேறு காரணங்களால் ஆர்வமில்லாமல் இருக்கும் முத்துச்செல்விக்கும், மருதநாயகத்துக்கும் எதிர்பாராத சூழலில் திருமணம் நிச்சயமாகிறது. குடும்பத்தினர் முன்னிலையில் தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில், இருவருக்கும் அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை.
தனது காதலருடன் திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக எப்படியாவது தப்பிச் செல்ல வேண்டும் என்று முத்துச்செல்வி திட்டமிடுகிறார். அதன்பிறகு அந்த ஒரே இரவில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதையே படம் நகைச்சுவை மற்றும் உணர்வுகளுடன் சொல்லுகிறது.
நடிகர்களின் இயல்பான நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, நகைச்சுவைக் காட்சிகள் ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது ஓடிடி ரசிகர்களை சந்திக்கிறது.
செப்டம்பர் 18 முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நெட்ஃபிளிக்ஸில் இப்படத்தை பார்க்கலாம்.
