கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்குவதால், சுற்றுலா பயணிகள் அவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் குறிப்பிட்ட காலங்களில் பூக்கும் செர்ரி மலர்கள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் மலர்கள் மலைப்பகுதியை அழகுபடுத்தும் வகையில் காட்சியளிக்கின்றன.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் வார இறுதி நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.
முக்கிய சுற்றுலா இடங்களில் கூட்டம்
கொடைக்கானல் ஏரிச்சாலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், குணா குகை, மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
செர்ரி மலர்களை கண்ட சுற்றுலா பயணிகள் அவற்றின் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.
நட்சத்திர ஏரியில் படகு சவாரி மேற்கொண்ட சுற்றுலா பயணிகள், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து பொழுதை கழித்தனர்.
மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்றனர். அங்கு காணப்படும் பசுமையான புல்வெளிகள், ஆடு மற்றும் முயல் பண்ணைகள், ஏரிகள் உள்ளிட்டவற்றை ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், விடுமுறை நாட்களில் கூடுதல் போலீசாரை நியமித்து மலைச்சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
