சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு கோடியே 26 ஆயிரத்து 601 பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் என்பதால் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 1,00,26,601 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக செப்டம்பர் 11-ம் தேதி ஒரே நாளில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 580 பேர் பயணம் செய்துள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் சிங்கார சென்னை அட்டை எனப்படும் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி 51 லட்சத்து 95 ஆயிரத்து 408 பேர் பயணம் செய்துள்ளனர். ஒற்றை பயண காகித கியூஆர் பயணச்சீட்டை 18 லட்சத்து 82 ஆயிரத்து 30 பேரும், சென்னை ஒன் செயலியை 3 லட்சத்து 12 ஆயிரத்து 300 பேரும் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், டிஜிட்டல் எஸ்.வி.பி., கியூஆர் குறியீடு பயணச்சீட்டு, வாட்ஸ்-அப் மற்றும் சிங்கார சென்னை அட்டை உள்ளிட்ட டிக்கெட் முறைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவது, நகர்ப்புற பொதுப் போக்குவரத்தில் மெட்ரோவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
