சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 1,450 தொழிலாளர்களில் இதுவரை 450 தொழிலாளர்கள் மட்டுமே ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பயிற்சி என்ற பெயரில் ஆலைக்குள் அனுமதிக்கப்படும் தொழிலாளர்களைக்கூட நிர்வாகம் மறைமுகமாக அச்சுறுத்துகிறது.
தொழிற்சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று பதிவுச் சான்றிதழை தமிழக அரசின் தொழிலாளர் துறை இன்னும் வழங்கவில்லை. சங்கப் பதிவு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிர்வாகத்துக்கு ஆதரவாக கால அவகாசம் கேட்டு வழக்கை நீடிப்பது தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தையும் ஏமாற்றும் செயலாகும். தமிழக அரசின் இந்த போக்கை கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 3,192 பணியிடங்களை மட்டும் நியமிப்பது சரியல்ல. அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் 2023 திரும்பப் பெறப்பட வேண்டும். தமிழகத்தில் விவசாய திட்டங்களுக்கு மின்னணு கணக்கெடுப்பில் மாணவர்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். இவ்வாறு தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.