நாகை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் நேற்று பகல் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன், வாகன போக்குவரத்தும் தடைப்பட்டது. நாகையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் மழைநீரில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வயல்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் பகல் முழுவதும் பெய்த மழை சம்பா, தாளடி பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.