மும்பை:நாய், பூனை கடித்தும் சிகிச்சை எடுக்காத வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையை அடுத்த கல்யாணை சேர்ந்தவர் பகவான் மண்ட்லிக் (27). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கோல்டன் பார்க்கில் நடைபயிற்சி சென்றார். அப்போது அவரை தெருநாய் ஒன்று கடித்து விட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு பூனையும் அவரை கடித்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு தலைவலி, உடல் வலி மற்றும் தொண்டை வறட்சி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. உடனே அவர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்.
இறுதியில் மும்பை கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும், இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதாக கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது