வாஷிங்டன்: ‘பிறப்பு அடிப்படையிலான குடியுரிமையின் நோக்கம் வேறு. வெளிநாட்டினர் அமெரிக்காவில் படையெடுப்பதற்காக அல்ல’ என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார். அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
“அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு, பெற்றோரில் ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் மட்டுமே அவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். இந்த உத்தரவு 30 நாட்களில் அமலுக்கு வரும். அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களின் குழந்தைகள் அமெரிக்காவின் ‘அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள்’ அல்ல என்பதால், குடியுரிமைச் சட்டத்தின் 14-வது திருத்தம் வழங்கிய அரசியலமைப்பு உத்தரவாதம் அவர்களுக்குப் பொருந்தாது” என்று டிரம்பின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சியாட்டில் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜான் கோக்னார், “டிரம்பின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது” என்றார். இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அவர் கூறினார். இந்தத் தடையை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேசிய அதிபர் டிரம்ப், “பிறந்த குடியுரிமையின் நோக்கம் வேறு. அது உன்னதமானது. அந்த நோக்கத்திற்காக அமலில் இருந்தால் 100 சதவீதம் வரவேற்பேன். ஏனெனில் கொண்டு வரப்பட்டது. அடிமைகளாக இருந்தவர்களின் குழந்தைகளின் நலனுக்காக இப்போது முழு உலகமும் அதை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு படையெடுக்க விரும்புகிறது. எல்லோரும் அமெரிக்காவுக்கு வருகிறார்கள். அவர்கள் தகுதியற்றவர்கள். அவர்களின் குழந்தைகளும் தகுதியற்றவர்களாக இருப்பார்கள்.
அப்படியானால், பிறப்புரிமை குடியுரிமையை ஊக்குவிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வெற்றி பெறுவோம். அந்த வெற்றியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார். டிரம்பின் உத்தரவு அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஹெச்-1பி விசாவில் பணிபுரிந்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வேலை விசா அல்லது சுற்றுலா விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி இயற்கை குடியுரிமை வழங்கப்படாது என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை தற்காலிக விசாவில் பணியமர்த்தும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.