வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து தனது இறுதி அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று தாக்கல் செய்தது. வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து அதன் ஆய்வுகளை நிறைவு செய்த பின்னர், மசோதாவில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் தொடர்பான இறுதி அறிக்கை 15-11 வாக்குகள் பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜே.பி.சி., தலைவர் ஜெகதாம்பிகா பால், பார்லிமென்ட் அறையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, வக்ஃப் திருத்த மசோதா வரைவு அறிக்கையை, நேற்று முறைப்படி தாக்கல் செய்தார்.
ஆனால், இந்த அறிக்கைக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறுகிய கால அவகாசத்தில் குழுவின் அறிக்கையை முழுமையாக ஆராய முடியாமல் சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் வக்பு சட்ட திருத்த மசோதாவின் இறுதி திருத்த அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, வக்ஃப் சொத்துக்களைக் கையாள்வதில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மை மற்றும் நவீனத்துவத்தை கொண்டு வரும் என்று பாஜக கூறி வருகிறது. எவ்வாறாயினும், இது முஸ்லிம் சமூகத்தின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தாக்குதல் எனவும், வக்பு வரி நடைமுறையில் தலையிடுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.