சென்னை: ஆரோக்கியம் அதிகரிக்க முளைக்கட்டிய ராகியை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ராகியை 6 முதல் 8 மணி நேரம் ஊறவைத்து, பின்பு தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு வெள்ளை துணியில் முடிந்து வைக்க வேண்டும். உங்கள் தேவைக்கேற்ப ஒன்று இரண்டு நாட்களுக்குக்கூட ராகியை முளைக்கட்ட விடலாம். அவ்வப்போது தண்ணீர் மட்டும் தெளித்தால் போதும். முளைகட்டிய ராகியை இப்படி நீங்களே வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். உங்கள் ஆரோக்கியம் செழித்திடும்.
சீரான செரிமானத்துக்கு உதவும்: குளிர்காலத்தில் செரிமான பிரச்னைகள் இயல்பை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம். மேலும், செரிமான பிரச்னைகள், மலச்சிக்கல் போன்ற நிலைகளையும் ஏற்படுத்தும். இந்நிலையில் நார்ச்சத்து நிறைந்த முளைகட்டிய ராகியை உங்கள் காலை உணவுக்கு சேர்த்து வர, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். நாள் முழுவதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்படலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: இதய தமனிகளில் ஏற்படும் அடைப்பை தடுக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும் முளைகட்டிய ராகியை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இது தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்: இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு நிரந்தரத் தீர்வு இல்லை என்றாலும், ஆரோக்கியமான உணவு முறை மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். முளை கட்டிய ராகி, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் நிறைந்துள்ள அதிகப்படியான நார்ச்சத்து இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.