உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடை, குளிர்காலத்தை முன்னிட்டு நவம்பர் 11-ம் தேதி மூடப்பட்டது. பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய வேதச் சடங்குகளுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கேதார்நாத் கோவில் நடை காலை 8.30 மணிக்கு மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமியின் உற்சவர் பல்லக்கு உகிமத்தில் உள்ள ஓம்காரேஸ்வர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குளிர்காலத்தில் அங்கு பக்தர்கள் வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யமுனோத்ரி கோவில் நடை காலை 10.28 மணிக்கு மூடப்பட்டது. தொடர்ந்து யமுனை அம்மனின் உற்சவர் பல்லக்கு அவரது குளிர்கால இருப்பிடமான கார்சாலிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக இரு கோவில்களும் ஏராளமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டில் சார்தாம் புனித யாத்திரைக்கு 64 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஆகாஷ்வாணி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கங்கோத்ரி கோவில் நடை நவம்பர் 10-ம் தேதி மூடப்பட்டது. இதனால் இந்த ஆண்டுக்கான கோடைக்கால யாத்திரை நிறைவடைந்துள்ளது.
