தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயில் சித்திரை தேரோட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேருக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோயிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது.
இந்நிலையில் சித்திரை பெருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த திங்கட்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது, இதையடுத்து பிரமாண்ட கொடிமரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி கோஷத்தின் நடுவே மங்கல வாத்தியம் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மேல் பெரியகோயிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள்.
அங்கு தியாகராஜர்- கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தொடர்ந்து காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வரும். தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலையில் இன்று காலை பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகம் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) கார்த்திகேயன் மற்றும் கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், தேர் அலங்கார பணிகளை பணியாளர்கள் துவக்கினர். தேரின் சாதாரண உயரம் 19 அடி, அகலம் 18 அடியாகும். ஆனால், தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாக காணப்படும். இதை போல், தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரம் செய்யப்பட்டவுடன் 43 டன் எடையாக இருக்கும் என கோயில் பணியாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.