அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆசை வரமே’ வெளியாகியுள்ளது.
‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஹாஸ்டல்’, ‘மன்மத லீலை’, ‘போர் தொழில்’, ‘ப்ளூ ஸ்டார்’ உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
அவரது 23-வது படமாக உருவாகும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்கிறார். ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பிரீத்தி முகுந்தனுக்கு இப்படம் முக்கியமான படமாக அமைந்துள்ளது.
‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள நிலையில், அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தில் ரொமான்ஸ் மற்றும் அதிரடி ஆக்ஷன் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சண்டைக் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், மதராஷே வரிகளில் உருவான ‘ஆசை வரமே’ பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடல் வெளியான நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
