சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இணைந்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளன.
ரஜினிகாந்தின் 173-வது படமாக உருவாகும் ‘தர்மன்’ திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், ராஷி கண்ணா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ராம் பொதினேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக அவர் ரஜினிக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் செய்திகள் பரவின. ஆனால் படக்குழு தரப்பில் இதுவரை அவரது கதாபாத்திரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையே நடிகை ராஷி கண்ணா சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படும் புகைப்படம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த், ராம் பொதினேனி மற்றும் ராஷி கண்ணா இடம்பெற்றிருந்த அந்தப் புகைப்படம் பின்னர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராம் பொதினேனி படத்தில் இருப்பது குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
எனினும் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளில் இதற்கான விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
