சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடிக்கும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் சோபிதா துலிபாலா மேற்கொண்ட கடுமையான பயிற்சி பேசுபொருளாகியுள்ளது.
தற்காப்புக் கலைகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சோபிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியிலான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பயிற்சி
படத்தின் சண்டைக்காட்சிகளை சோபிதா சவாலாக எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். பாரம்பரிய உடற்பயிற்சிகள் மற்றும் தற்காப்புக் கலைகளில் அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ஒத்திகையின்போதே சண்டைக்காட்சிகளை தாங்களே செய்யும் வகையில் பயிற்சி பெற்றதாகவும், டூப் கலைஞர்களை பயன்படுத்தாமல் பல காட்சிகளில் நேரடியாக நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாகார்ஜுனா பாராட்டு
சோபிதாவின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்த அவரது மாமனாரும் நடிகருமான நாகார்ஜுனா சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார்.
‘வேட்டுவம்’ படத்தின் உலகத்தை உருவாக்கிய விதம் தனக்கு பிடித்திருப்பதாகவும், சோபிதா படத்துக்காக கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
