திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை விழா கடந்த 6-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி மலைக்கோவிலில் குவிந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
இந்த நிலையில் நடிகை ரோஜாவும் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். திருத்தணி முருகன் கோவிலுக்கு அடிக்கடி குடும்பத்துடன் வந்து வழிபட்டு வரும் அவர், ஆடிக்கிருத்திகை விழாவின்போது காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் இந்த ஆண்டும் காவடி சுமந்து கோவிலுக்கு வந்த ரோஜா, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து வழிபட்டார். பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக ஆடிக்கிருத்திகை விழாவின்போது காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த ஆண்டும் அவர் காவடி சுமந்த காட்சிகளை கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் செல்போன்களில் பதிவு செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
