சென்னை: தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இதுகுறித்து பேசலாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?
‘வருமானத்தில் பங்கு’ என்ற அடிப்படையில்தான் இனி படங்கள் தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 2ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. ‘எங்களை கேட்காமல் தன்னிச்சையாக அறிவிப்பதா’ என்று நடிகர் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவித்தது.
‘பலமுறை சொல்லியும் நடிகர் சங்கம் மவுனம் சாதிப்பதால் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டடது. பேச்சு வார்த்தைக்கு வந்தால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும்’ என்று தயாரிப்பாளர் சங்கம் பதில் அளித்தது.
இந்த கடித போர் இன்னும் முடிவிற்கு வரவில்லை. ‘தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டட பிறகு இது குறித்து பேசலாம்’ என்று தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: வருமான பகிர்வு மற்றும் வேலை நிறுத்தம் தொடர்பான தங்கள் கடிதம் கிடைத்தது. கடிதத்தில் தங்கள் குறிப்பிட்டபடி 18.08.2024 தேதி அன்று நடந்த சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இடையில் 2006 ஆம் ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை தென்னிந்திய நடிகர் சங்கம் முன் வைத்தது.
அதுவே பல சிக்கல்களுக்கு சுமூகமான தீர்வாக அமையும் என்பதை ஏற்றுக் கொண்டு தங்கள் தரப்பின் பரிந்துரைகளை முன் வைத்ததை நாங்கள் மறுக்கவில்லை. எனினும், தொடர்ந்து நிகழ்ந்த இரு தரப்பு பரிந்துரைகள் தொடர்பான வரைவோலைகளின் அடிப்படையில் இறுதியாக எங்கள் தரப்பின் இறுதியான ஒப்பந்த விதிகளுக்கான பரிந்துரைகளின் பட்டியலை தங்களிடம் சமர்ப்பித்தோம். அதில் நடிகர்களுக்கான ஊதியம் குறித்த எங்கள் பரிந்துரை தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டது. அதன்படி சம்பளத்தில் 60 சதவீதம் மட்டுமே மொத்த படப்பிடிப்பு முடிந்தபின் தர முடியும். மீதி தொகையை பின்னணி குரல் பதிவு முடியும் முன் வாங்கி கொள்ளலாம். இந்த முறையில் தான் தயாரிப்பாளர்களின் வட்டி செலவு கணிசமாக குறையும். என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் எந்த நிலையிலும் வருமானத்தில் பங்கு என்ற முறையை அறிவுறுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இதற்கு மாறாக தென்னிந்திய நடிகர் சங்கம் இது தொடர்பாக பதில் அளிக்கவில்லை என்று தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. மேலும் எங்கள் உறுப்பினர்களான தனுஷ், சிம்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்ட புகார்களுக்கு எங்கள் தரப்பில் முழு முயற்சி மேற்கொண்டு அதற்கு தீர்வும் காணப்பட்டதை தாங்களும் மறுக்க இயலாது. மாறாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தரப்பு புகார்களுக்கு எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை என்பதை நினைவூட்ட விழைகிறோம்.
அத்துடன் தங்கள் சங்கத்தில் பொதுக்குழு நிகழ்ந்ததாகவும் அதில் ‘வருமானத்தில்’ குறித்து தீர்மானம் நிறைவேற்றி எங்களுக்கு நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தியதாகவும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இருப்பினும் அது தொடர்பாக எந்த நேரடி தகவலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதையும், ஊடகச் செய்திகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செயல்படும் வழக்கம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இல்லை என்பதையும், தங்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே ‘வருமானத்தில் பங்கு’ குறித்து தனிப்பட்ட முறையில் இது நாள் வரை எந்தவித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்பதை மீண்டும் இதன் மூலம் வலியுறுத்துகிறோம். அது புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான ஒரு பரிந்துரையாக மட்டுமே இருந்ததையும், இரு தரப்பாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டதையும் தாங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறோம். இத்தகைய சூழலில், தென்னிந்திய நடிகர் சங்கம் எவ்வித பதிலும் அளிக்காமல் தாமதப்படுத்துவதாக எங்கள் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல.
இறுதியாக, தாங்கள் அறிவித்துள்ள அடையாள வேலை நிறுத்தம் தொடர்பான தகவல் எங்களுக்கு தங்களது 27.04.2026 தேதியிட்ட கடிதம் மூலமாகவே கிடைக்கப் பெற்றது. இடைப்பட்ட நான்கு தினங்களுக்குள் படப்பிடிப்பு நிமித்தமாக உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் எங்கள் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அனைவருக்கும் அது குறித்து தெரிவிப்பதும், அதன் பொருள் குறித்து கலந்தாலோசனை செய்து தீர்மானிப்பதும் நடைமுறையில் சாத்தியமல்ல.
இருப்பினும் 27.04.2026 தேதியிட்ட எங்கள் கடிதத்தில் தெரிவித்தபடி தங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்ட பின், 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் பரஸ்பரம் பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தவும், சுமூக முடிவு காணவும் நாங்கள் ஆயத்தமாக உள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.