இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான ‘3 BHK’ திரைப்படம், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வியலை உணர்ச்சிப்பூர்வமாகவும் இயல்பாகவும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சிறப்பான படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, ரிது ரகுநாத், சாய்த்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்பம், வாழ்க்கை மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உறவுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை மிக இயல்பாக திரையில் காட்டியிருக்கும் இந்த படம் தற்போது விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.

இந்தப் படத்தைப் பார்த்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான ஸ்டாலின் பாலுச்சாமி, தனது சமூக வலைதளத்தில் படத்தின் மீதான தனது அனுபவங்களை பகிர்ந்து எழுதிய பாராட்டு பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. “3 BHK படம் எல்லோரும் தவறவிடாமல் பார்க்க வேண்டியது” என்று கூறிய அவர், படம் தனக்கு தனிப்பட்ட முறையிலும் நெருக்கமாக இருந்ததாக உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார். தன்னுடைய அம்மா மற்றும் தந்தையுடன் தனது வாழ்க்கையை படம் பிரதிபலிப்பதாகக் கூறிய அவர், “மனதுக்குள் இருந்த பரிதவிப்பை இடைவெளிக்கு பின்னான காட்சி முழுமையாக வெளிப்படுத்தியது” என தனது உணர்வுகளை எழுதியுள்ளார்.
இப்படத்தில் சித்தார்த் நடித்துள்ள கதாபாத்திரம், இன்றைய இளைஞர்களின் மன அழுத்தம், கல்விச் சுமை, பெற்றோரின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமையால் ஏற்படும் கோபம், குழப்பம் என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டார். “இந்த engineering படிப்பு கொடுத்த மன அழுத்தம் மற்றும் வீட்டோட நம்பிக்கையை காப்பாத்த முடியாமையால் ஏற்பட்ட கோபத்தை சித்தார்த் மிக இயல்பாக நடித்துள்ளார்” என அவர் புகழ்ந்துள்ளார். இப்படத்தின் இடைவேளைக்கு முந்தைய மென்மையான போக்கை அடுத்து, இரண்டாவது பாதியில் படம் நம்ம வீட்டின் நிஜமான நிகழ்வுகளை போலவே மாற்றப்படுகிறது என்பதும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘3 BHK’ திரைப்படம், மெல்லிய உணர்வுகளை உணர்த்தும், வாழ்க்கையின் அடித்தளத்தை அப்படியே காட்சிப்படுத்தும் ஒரு சின்ன சிற்பம் போல இருக்கிறது. படம் எடுக்க இயக்குநர் மற்றும் அவருடைய குழு எவ்வளவு போராட்டம் நடத்தி இருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்தாலே அதிர்ச்சி ஏற்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். குடும்ப உறவுகள், பணம், ஆணும் பெண்ணும் இடையேயான சிக்கல்கள் போன்றவை எவ்வளவு நேர்மையாகக் கூறப்பட்டுள்ளன என்பதை பாராட்டியுள்ளார். ஸ்டாலின் பாலுச்சாமியின் இந்த பதிவின் மூலம், ‘3 BHK’ திரைப்படம் வெறும் கற்பனை அல்ல, வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.