ஸ்பெயின்: ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர பார்சிலோனா கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் ‘அஜித்குமார் ரேசிங்’ அணி ஜிடி3 ப்ரோ-ஏஎம் பிரிவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்ட அஜித், சர்வதேச கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதற்காக தனது சொந்த ரேசிங் அணியையும் உருவாக்கியுள்ளார்.
24 மணி நேர சவால்
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற 24 மணி நேர பந்தயம் மிகுந்த சவால் நிறைந்ததாக அமைந்தது. பல மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்ட வேண்டிய சூழலில், ஓட்டுநர்களின் திறமையுடன் அணியின் திட்டமிடலும் முக்கிய பங்கு வகித்தது.
இந்த போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி ஜிடி3 ப்ரோ-ஏஎம் பிரிவில் 2-ம் இடத்தை பிடித்தது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் 5-ம் இடமும், கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில் 3-ம் இடமும் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசியக்கொடியுடன் அஜித்
அணியின் சாதனையை அஜித்குமார் தேசியக்கொடியை ஏந்தியபடி கொண்டாடினார். பின்னர் அணியினருடன் மேடையில் கோப்பையையும் பெற்றார்.
வெற்றிக்குப் பிறகு அஜித் கோப்பையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
