புதுடில்லி: சாதனைக்கு மத்தியில் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. அட ஆமாங்க மெகா சான்ஸ் ‘மிஸ்’ ஆகிவிட்டது. இருப்பினும் சச்சினின் மற்றொரு மைல்கல்லை தகர்த்துள்ளார் விராட் கோலி.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில் அரை சதம் விளாசிய நிலையில், பின்னர் வந்த கே.எல்.ராகுல் நிலைத்து நின்று சதம் விளாசினார். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்களை சேர்த்தது.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் இரு விக்கெட்களை இழந்தாலும், வில் யங் மற்றும் டேரில் மிட்சல் இணை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. வில் யங் 87 ரன்கள் சேர்த்த நிலையில், டேரில் மிட்சல் ஆட்டமிழக்காமல் 131 ரன்களுடன் சேர்த்தார். 47.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி, தொடரை சமன் செய்தது. தொடரை தீர்மானிக்கும் 3வது போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்தூரில் நடைபெறுகிறது.
இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்த சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு இந்த பெருமை சச்சின் டெண்டுல்கர் வசம் இருந்தது. ஆயிரத்து 750 ரன்களை சச்சின் அடித்திருந்த நிலையில் விராட் கோலி அதனை முறியடித்தார். 42 போட்டிகளில் சச்சின் பெற்ற பெருமையை 35 போட்டிகளில் விராட் கோலி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியின் சாதனை இருந்தாலும் நேற்றைய போட்டியில் ஒரு சோகமும் நிகழ்ந்தது. சுப்மன் கில் அவுட் ஆன பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் விராட் கோலிக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டது. ஒருபுறம் விராட் கோலியும், மறுபுறம் கே.எல். ராகுலும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட முடியாமல் திணறினர்.