புதுடில்லி: தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான 12 நிமிட கட்டுப்பாட்டை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 10 நிமிட வணிக விளம்பரங்கள், 2 நிமிட சுய விளம்பரங்கள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்ற ‘10+2’ நடைமுறையும் முடிவுக்கு வருகிறது.
2006-ம் ஆண்டு தொலைக்காட்சித் துறை ஆரம்பகட்ட வளர்ச்சியில் இருந்தபோது 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அப்போது நாட்டில் சுமார் 62 தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன.
தற்போது கேபிள் தொலைக்காட்சி முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதுடன், டிடிஎச், ஐபிடிவி உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் வேகமாக வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நாட்டில் இயங்கும் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது.
இதனிடையே விளம்பரக் கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்படும் டிஜிட்டல் ஊடகங்கள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, தொலைக்காட்சி துறைக்கு டிஜிட்டல் தளங்களுக்கு இணையான வாய்ப்பை வழங்கும் நோக்கில் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் 12 நிமிட விளம்பர விதிமுறையை செல்லுபடியாகும் என உறுதி செய்திருந்தது. இருப்பினும், தற்போதைய ஊடகச் சந்தை சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
புதிய விதிமுறைகள் தொடர்பான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டதும் அவை உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
