மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் தொடர்பான வழக்கில், அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கோவில் நிதியில் இருந்து எவ்வளவு கட்டணம் வழங்கப்பட்டுள்ளது என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே நீதிபதிகள், மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் மலையை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ததில் சில இடங்களில் மாறுபாடுகள் இருப்பது தெரியவந்ததாகவும், ஆகஸ்ட் 5-ம் தேதி மீண்டும் அளவீடு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். பழைய ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க லண்டன் பிரிவி கவுன்சில் உத்தரவுகள் தொடர்பான ஆவணங்கள் மாநில ஆவணக் காப்பகத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அவை கிடைத்ததும் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கோவில் நிதியில் இருந்து எவ்வளவு தொகை கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பு, வழங்கப்பட்ட தொகை குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கப்படும் என்றது. வழக்கை வரும் கார்த்திகை தீபத் திருநாளுக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணையை செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
