சென்னை: புதினா இல்லாத இறைச்சி குழம்பை பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு இதன் வாசனை அனைவரையும் கவர்ந்திழுக்க கூடியது. இது நமக்கு அதிக வாசனையை தருவது மட்டுமல்லாமல் ஒரு மருத்துவ மூலிகையாகும். இதை குழம்புகளில் மட்டுமல்லாமல் சட்னி, ஜூஸ் செய்து கூட பயன்படுத்தலாம் . எந்த விதத்தில் பயன்படுத்தினாலும் இதன் குணங்கள் மாறுவதே இல்லை. தற்போது இந்த பதிவில் புதினாவின் மருத்துவ பயன்களை குறித்து பார்க்கலாம்.
புதினா கீரையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, புரதம்,கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாக புதினா இருக்கிறது. அதாவது மது, சிகரெட், புகையிலை போன்ற பொருட்களை அதிகம் உபயோகப் படுத்துவோரின் உடலில் நச்சுக்கள் அதிகம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தினமும் புதினா இலைகளை சாப்பிட்டு வந்தால் நச்சுக்கள் அனைத்தும் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறி, நல்ல ஆரோக்கியத்தை தரும்.
அசைவ உணவுகள் மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானம் அடையச் செய்கிறது. மேலும் வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சரி செய்கிறது. கடுமையான வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்கும். வாயுத் தொல்லையை அகற்றும்.
சாப்பிட்ட பிறகு சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். பற்கள் மற்றும் ஈறுகளில் இருக்கும் கிருமிகளை அளிக்க புதினா இலை சாறு உதவுகிறது. புதினா சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது. இதை அடிக்கடி சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் ஏற்படும் பிரச்னைகளை குணப்படுத்தலாம்.
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதிலிருந்து விடுபட்டு முழுமையான இன்பத்துடன் வாழ புதினாக் கீரை உதவுகின்றது. கோடைக்காலங்களில் புதினா இலைகளை தினமும் ஏதாவது முறையில் கலந்து சாப்பிட்டு வர உடல் சூட்டை குறைத்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தருகிறது. மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது.