சென்னை: வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியதுதான் நெஞ்செரிச்சல். இதை போக்க என்ன செய்யலாம்?
வயிறு அதிகப்படியான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் போது அமிலத்தன்மை ஏற்படுகிறது, இதனால் மார்பு, கழுத்து பகுதி, மற்றும் வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படுகிறது, இது தான் நெஞ்செரிச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அல்லது GERD எனப்படுகிறது.
உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், நேரத்துக்குச் சாப்பிடாமல் இருத்தல், அதிக உணவு உட்கொள்ளுதல், போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். மேலும் கொழுப்பு மற்றும் காரமான உணவுகள் மற்றும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியா ஆகியவையும் நெஞ்செரிச்சலுக்கான முக்கிய காரணங்களாகும்.
நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது, டீ-காபி, புகைபிடித்தல், குளிர் பானங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
வினிகர், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, அன்னாசி, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் போன்ற அமிலத்தன்மை கொண்டவை என்று பொருள்படும் குறைந்த pH உள்ள அனைத்து பொருட்களையும் மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளுங்கள்.
பழம் – வாழைப்பழம் pH ஐ சமன் செய்கிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும், இது உணவுக்குழாய் முதல் வயிற்றில் உள்ள ம்யூகஸ் வரை, ஒரு பூச்சு போல செயல்பட்டு பாதுகாக்கிறது. இதன் காரணமாக அமிலத்தன்மை நீக்கப்படுகிறது. இது தவிர ஆப்பிள், தர்பூசணி, மாதுளை, பப்பாளி போன்றவையும் நன்மை பயக்கும். பழைய அரிசி, கோதுமை, பார்லி,மாதுளை, நெல்லிக்காய், வெள்ளரி, வெள்ளரிக்காய், கீரை, ஆகியவை அமிலத்தன்மையைக் குறைக்கும். இளநீர், மோர் ஆகியவையும் இயற்கையான ஆன்டாக்சிட்கள். அவை உடனடி நிவாரணம் தரும்.