சென்னை: கோதாவரி–காவிரி–குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும், அதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்கவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் விரிவான கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருப்பதாகவும், நிலத்தடி நீர் வளமும் ஆபத்தான அளவிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நீர்ப்பற்றாக்குறை கடுமையாக இருப்பதால், கோதாவரி–காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டம் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
தேசிய நீர் மேம்பாட்டு முகமை தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் தேவையான மாற்றங்களை செய்து, காவிரி ஆற்றின் கட்டளைக் கதவணை வரை திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், திட்டத்தை விரைந்து செயல்படுத்த ஒன்றிய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்கள் இணைந்து செயல்படும் சிறப்பு நோக்கு அமைப்பை உருவாக்கவும், தேவையான நிதியை உறுதி செய்யவும் பரிசீலிக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நலனை கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை தீர்த்து, இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
