சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தலைமைச் செயலக வளாகத்தில் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசு இதுவரை எந்தவொரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று குற்றம்சாட்டினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு புதிய அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது, ஆண்டுதோறும் 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது, முதியோர் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் நிதியுதவி, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என விமர்சித்தார்.
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.55,785 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.1 லட்சத்து 21,819 கோடியாகவும் உள்ள நிலையில், ரூ.10 லட்சத்து 98,768 கோடி கடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
