புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 16, 17, 18 ஆகிய தேதிகளில் மூன்று நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் என கூறப்படுகிறது.
இதையடுத்து தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான திருத்த மசோதாக்களை சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு பதிலளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவானதாகவும், தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
