‘பாரத் சம்மிட் – Forging a New World’ என்ற பெயரில் இரண்டாவது சர்வதேச மாநாடு நவம்பர் 12 முதல் 14-ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
உலகளவில் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள், உள்ளடக்கிய வளர்ச்சி, முற்போக்கு அரசியல் மற்றும் காலநிலை நீதி ஆகியவை மாநாட்டின் முக்கிய விவாதப் பொருள்களாக உள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வருகை தர உள்ளனர்.
பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேசப் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் பிரச்சினைகளை உலகளாவிய விவாதங்களுக்குக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாகவும் இந்த மாநாடு அமையும் என ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தச் சந்திப்பில் ஜனநாயக அமைப்புகளின் வலிமை, சமூக சமத்துவம், சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் உலக நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
