புதுடில்லி: கனடாவுக்கு இந்தியாவின் கண்டனம்… ‘நாட்டின் சைபர் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இந்தியா உள்ளது’ என, கனடா கூறியுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விவகாரத்தில் வட அமெரிக்க நாடான கனடா தொடர்ந்து நம் நாடு மீது பல புகார்களை கூறி வருகிறது.
இந்நிலையில், கனடாவின் சைபர் பாதுகாப்பு மையம் சமீபத்தில், 2025 – 2026ம் ஆண்டுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், எதிரி நாடுகள் பட்டியலிலும் இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது.
சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தன் உள்நாட்டு சைபர் திறன்கள் வாயிலாக அதிநவீன சைபர் திட்டங்களை உருவாக்குவதில், இந்திய தலைமை தீவிரமாக உள்ளது. உளவு, பயங்கரவாத எதிர்ப்பு போன்ற பாதுகாப்பு கட்டாயங்கள், சர்வதேச அளவில் தன் நிலையை உயர்த்திக் கொள்வதுடன், தன் மீதான எதிர்மறையான பிம்பங்களை தகர்க்க வேண்டும் என்பது இந்திய அரசின் நோக்கமாக உள்ளது.
இதற்காக உருவாக்கப்படும் சைபர் திட்டங்கள், தனியார் வாயிலாக இயங்க உள்ளது. கனடாவை உளவு பார்ப்பதற்காக இந்தியா இந்த முயற்சியை மேற்கொள்கிறது. கனடா அரசுக்கு எதிராக பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தலும் அதிகம் உள்ளது. இந்தியாவால் உருவாக்கப்படும் இந்த சைபர் அச்சுறுத்தல் வாயிலாக, இரு தரப்பு உறவில் மிரட்டல் இருக்கும் என்று கணிக்கிறோம்.
உலக அளவில் வலுவான நாடாக தன்னை காட்டிக் கொள்வதற்காக, இந்தியா உருவாக்கி வரும் இந்த சைபர் திட்டங்கள், கனடாவுக்கு நிச்சயம் பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், கனடாவின் முக்கிய எதிரி நாடுகள் பட்டியலில், சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகியவற்றுடன் இந்தியாவின் பெயர் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து நேற்று கூறியதாவது:
இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சிகளில் கனடா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்த அறிக்கை ஒரு மிகச் சிறந்த உதாரணம். உலக அரங்கில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகைக்கு தகவல்களை கசிய விட்டதாக, கனடாவின் அமைச்சர், உயர் அதிகாரி சமீபத்தில் ஒப்பு கொண்டுள்ளனர்.
இதில் இருந்து எவ்வித ஆதாரமும் இல்லாமல், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை கூறுவது, கனடாவின் வழக்கம் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.