சென்னை: தமிழகத்தில் 10 ஆயிரம் இடங்களில் ஆபரேஷன் சிந்தூர் மூவர்ண கொடி பேரணி நடத்த பாஜ திட்டம் தீட்டியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் – அகரம் தென் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக பாஜ சார்பில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ மூவர்ண கொடி பேரணி தொடர்பான மாநில, மாவட்ட குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், அகில இந்திய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம், மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மாநிலத் துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதும் 10ஆயிரம் இடங்களில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ மூவர்ணக் கொடி பேரணி மாதம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், ஒரு மாவட்டத்திற்கு குறைந்தது 1500 இடங்களில் இந்த பேரணி நடத்தப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.