திருச்சி: உற்சாக வரவேற்பு… திருச்சியில் தவெக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தேர்தல் பிரசாரம் வருகிற 21ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது.
இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று மாலை திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று விஜய் திருச்சி புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து திருச்சி விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து தனது பரப்புரை வாகனத்தின் மீது நின்றவாரு சாலை மார்க்கமாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். இந்த ரோடு ஷோவில் ஆயிரக்கணாக்கான த.வெ.க. தொண்டர்களும், பொதுமக்களும் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே, பரப்புரைக்காக திருச்சி சென்றுள்ள தவெக தலைவர் விஜய் அங்குள்ள அந்தோணியார் ஆலயத்தில் மண்டியிட்டு விஜய் பிரார்த்தனை செய்தார்.
திருச்சியில் விஜய் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் 10 பொதுவான நிபந்தனைகளுடன் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் வழங்கும் நிபந்தனைகளை பின்பற்றுமாறும் கூறி அனுமதி அளித்துள்ளார். அதில், பிரசாரத்தின்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வழிநெடுகிலும் கட்சிக்கொடிகள் அமைக்கக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது