சென்னை: திருச்சியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, தமிழக பெண்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தவெக அரசு பொறுப்பேற்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போயிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எதற்குமே பொறுப்பேற்காத தவெக அரசு, எந்த சூழலிலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற எண்ணத்தில்தான் குற்றவாளிகள் தைரியமாக சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் விஜய், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க மாட்டார் என்பது தெளிவாகிவிட்டதாகவும், குறைந்தபட்சம் அதிகாரிகளாவது மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.