சென்னை: தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.அண்ணாமலைக்கு எதிராக சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் தொடர்ந்த தனிநபர் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை 2023-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது அளித்த பேட்டி ஒன்றில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தொடர்பாக கூறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு பியூஸ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் அளித்திருந்தார்.
இந்தப் பேச்சு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக புகார்தாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் மனு
தனக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட தனிநபர் புகார் மற்றும் அதனடிப்படையில் நிலுவையில் இருந்த நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதன் மூலம் இந்த குறிப்பிட்ட தனிநபர் புகார் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
