சென்னை: காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று காலை தொடங்கி வைத்து, போலீசாருடன் இணைந்து கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றினார். இதில் போலீஸ் அதிகாரிகள், ஊர்க்காவல் படையினர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 1859-ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை உருவாக்கப்பட்ட செப்டம்பர் 6-ந்தேதி ஆண்டுதோறும் ‘காவலர் தினமாக’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காவல் ஆணையர் அமல்ராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
போலீஸ் அதிகாரிகள், ஊர்க்காவல் படை வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். கல்லூரி மாணவ-மாணவிகள் என 1,000-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
காவலர் தினக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. காவல்துறை இசைக்குழு மற்றும் பேக்-பைப்பர் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னையின் முக்கிய சந்திப்புகளில் உள்ள எல்.இ.டி., எல்.சி.டி. திரைகளில் காவலர் தின வாழ்த்துச் செய்திகள் மற்றும் விழிப்புணர்வு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
மேலும், சென்னையின் 4 காவல் மண்டலங்கள் மற்றும் 12 மாவட்டங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு, சைபர் குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் ஏ.ஜி. பாபு (தலைமையிடம்), கே.எஸ். நரேந்திரன் நாயர் (தெற்கு), தெற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் மற்றும் துணை ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குப்பைகளை கண்ட இடங்களில் வீச வேண்டாம்
நிகழ்ச்சியின் இறுதியில் காவல் ஆணையர் அமல்ராஜ் பேசுகையில், கடற்கரையை அசுத்தப்படுத்தாமல் தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது ஒவ்வொரு பொதுமகனின் பொறுப்பு என்றார்.
கடற்கரைக்கு வருபவர்கள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கண்ட இடங்களில் வீசாமல், அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
