தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு நேற்று நடைபெற்றது.
சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணிகளை அரசாணை எண் 15 மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் பெண் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், வேளாண்மைத் துறையில் பணியாற்றும் அலுவலர்களின் பணிச்சுமை, பணிச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முறையீட்டில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களைச் சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர்கள், வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு அரசு திட்டங்கள் சென்றடைவதில் களப்பணியாளர்களின் பங்கு முக்கியமானது என்பதால், தங்களது கோரிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தினர்.
