கும்பகோணம்: ஆடி 18 பெருவிழாவை முன்னிட்டு அணைக்கரை மீன் சந்தையில் மீன் மற்றும் இறைச்சி வாங்க அதிகாலை முதல் மக்கள் குவிந்தனர்.
தமிழக டெல்டா பகுதிகளில் இன்று ஆடி 18 பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நாளில் புனிதமாகவும் விவசாயிகளின் தெய்வமாகவும் போற்றப்படும் நதி மற்றும் நீர்நிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மக்கள் வழிபாடு நடத்துவார்கள்.
குறிப்பாக இந்த நாளில் மீன் மற்றும் இறைச்சிகளின் விற்பனை படு ஜோராக இருக்கும் அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அணைக்கரை மீன் சந்தையில் இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் மீன் மற்றும் இறைச்சி வாங்க குவிந்தனர்..
ஆடி 18 முன்னிட்டு இந்த மீன் சந்தையில் இன்று இறால் 350 ரூபாய்க்கும் கெண்டை மீன் 160 ரூபாய்க்கும், ஜிலேபி மீன் 120 ரூபாய்க்கும், போட் லாக் 150 ரூபாய்க்கும், உயிர் கெண்டை மீன் 160 ரூபாய்க்கும், கிழங்கா மீன் 80 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது… மாட்டுப் பொங்கல், ஆடி 18, தீபாவளி உள்ளிட்ட நாட்களில் இந்த மீன் சந்தையில் மக்களின் கூட்டம் வெகுவாக இருக்கும்.
ஆடி 18 பெருவிழாவை முன்னிட்டு நதிகளுக்கு ஒரு புறம் மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்துவதும் மறுபுறம் அணைக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் அதிகாலை முதலே மக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.